தமிழீழ பிரகடனம் செய்வதற்காகவா கஜேந்திரன், சிவாஜிலிங்கம் கோத்தபாயவை சந்தித்தனர்?

Sunday, February 28, 2010
அண்மையில் தமிழ் மக்களின் அரசியல் நிலமைகள் பற்றி எனது ஊடகத்துறை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு பற்றி அவர் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தமிழ் டயஸ்போறாவுடன் (tamil diaspora) பேசி ஏன் ஒரு முடிவுக்கு வருகிறார்கள் இல்லை. மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் தரப்பின் கருத்துக்களை புறம் தள்ளி விட்டு அரசியல் நடத்தலாம் என கருதுகிறார்களா என்ற தொனியில் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீது மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களில் இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மீது மிகக்காரசாரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மொத்தத்தில் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு துரோகிகள் பட்டம் வழங்கப்பட்டு விட்டது.

இறுதியில் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர் தரப்பின் அழுத்தம் காரணமாக தற்போது அகில இலங்கை தமிழ் காங்கிரஷின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனியாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

துரோகிகளாக்கப்பட்டிருக்கும் சம்பந்தன் தரப்பினர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களில் சில...

1) சம்பந்தன் உட்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இந்தியாவின் கைபொம்மையாக செயற்படுகின்றனர். இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றனர்.
2) தமிழீழ கொள்கையை சம்பந்தனும் கூட்டமைப்பினரும் கைவிட்டு விட்டனர்.
3) 2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் பரிந்துரைக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட செல்வராசா கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு இம்முறை வேட்பாளர் பட்;டியலில் இடம் வழங்கப்படவில்லை.
4) சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். இவர்களின் குடும்பங்கள் இந்தியாவில் தங்கியுள்ளன.
5) சுரேஷ் பிரேமச்சந்திரனின் மனைவி கேரளாவைச்சேர்ந்தவர். எனவே அவர் நாராயணனின் சொந்தக்காரராக இருக்கலாம்.
6) தமிழ் டயஸ்போறா என்று தங்களை அழைத்துக்கொள்ளும் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளின் ஆலோசனையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெறுவதில்லை. அவர்களுடனான தொடர்புகளை பேண மறுத்து வருகிறது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ் தரப்பினர் சிலர் ஒரு படி மேலே சென்று சம்பந்தன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைப்பதவியிலிருந்து விலக வேண்டும் என கூறிவருகின்றனர்.

( பிரான்சில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சம்பந்தனை சுட்டுத்தள்ள வேண்டும் என்று கூட்ட ஏற்பாட்டாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர் கூறினார். )

ஓட்டுமொத்தத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒளித்துக்கட்டப்பட வேண்டும், சம்பந்தனும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தமிழ் மக்கள் மத்தியில் துரோகிகளாக இனங்காட்டப்பட்டு இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற முனைப்போடு மேற்குலக நாடுகளில் உள்ள சில தமிழ் தரப்பினர் கூறிவருகின்றனர்.

பொதுத்தேர்தலுக்கு திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றியும் சம்பந்தன் உட்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் துரோகிகளாக இனங்காணப்பட்டு ஓரங்கட்டப்பட வேண்டியவர்களா என்பதையும் பார்ப்போம்.

இவர்கள் வைக்கும் முதலாவது குற்றச்சாட்டு சம்பந்தன் உட்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இந்தியாவின் கைபொம்மையாக செயற்படுகின்றனர். அடிக்கடி இந்தியாவுக்கு சென்று பேசுகின்றனர். இந்தியாவினால்தான் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியும் என நம்புகின்றனர்.

இந்த குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் சில விடயங்களை தமக்கு மிக வசதியாக மறந்து விடுகின்றனரா என தெரியவில்லை.

மேற்குலக நாடுகளில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்துபவர்களாக இருந்தாலும் சரி நாடுகடந்த அரசை அமைக்க இருப்பவர்களாக இருந்தாலும் சரி அவற்றின் மூலம் மேற்குலக நாடுகளின் ஆதரவைப்பெற்று அதன் ஊடாகவே தமது நோக்கத்தை அடையப்போவதாக கூறிவருகின்றனர்.

ஆனால் இந்த மேற்குலக நாடுகள் ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிடுவதாக இருந்தால் இந்தியாவின் பூரண அனுமதி இன்றி அணுஅளவும் அவர்கள் அசைய மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் இணக்கத்துடன் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்ட நோர்வே இலங்கைக்கு செல்லுகின்ற போதும் அங்கிருந்து திரும்புகின்ற போதும் புதுடில்லிக்கு சென்று என்ன பேசுவது என்பது பற்றியும் பின்னர் என்ன பேசினோம் என்பது பற்றியும் இந்தியாவுக்கு ஒப்புவித்து விட்டுத்தான் வந்தார்கள் என்பதை நோர்வே அண்மையில் தெரிவித்திருந்தது.

அமெரிக்காவாக இருக்கலாம் அல்லது ஐரோப்பிய நாடுகளாக இருக்கலாம் அவர்கள் முன்னிலையில் இந்தியாவா ஈழத்தமிழரா என்ற தெரிவை முன்வைக்கின்ற போது அவர்கள் இந்தியாவைதான் தெரிவு செய்வார்கள் என்பதுதான் உண்மை.

தென்னாசிய பிராந்தியத்தில் வல்லாதிக்க சக்தியாக வளர்ந்து வரும் சீனா மேற்குலக நாடுகளுக்கு சவாலாக மேலோங்கி வரும் இவ்வேளையில் அந்த பிராந்தியத்தின் மற்றுமொரு பலம்பொருந்திய சக்தியான இந்தியாவை தமது நேசசக்தியாக வைத்திருக்க வேண்டிய தேவை மேற்குலக நாடுகளுக்கு இருக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவை மீறி மேற்குலக நாடுகள் எவையும் ஈழத்தமிழர்களுக்கு உதவ முன்வருவார்கள் என நம்பமுடியாது. ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து மேற்குலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தாலும் அவர்கள் இந்தியா ஊடாகவே இந்தப்பிரச்சினையை கையாள்வார்களே தவிர இந்தியாவை தவிர்த்து விட்டு இந்தியாவிற்கு தெரியாமல் ஈழத்தமிழர்களுக்கு உதவுவார்கள் என்பது யதார்த்தத்திற்கு புறம்பானதாகும்.

இதனால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவை நோக்கி செல்கின்றனர் என நான் நினைக்கின்றேன். இது தவிர வன்னியில் யுத்தம் நடைபெற்ற இறுதிக்கால கட்டத்தில் கூட விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் இந்தியா இந்த விடயத்தில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என கோரி சில அறிக்கைகளை விட்டிருந்தார். அந்த அடிப்படையில்தான் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இந்தியாவை நோக்கியும் மேற்குலகை நோக்கியும் செல்கின்றனர். அது மட்டுமல்ல விடுதலைப்புலிகளின் தலைவரின் இறுதி மாவீரர் தின உரையின் போதும் இந்தியாவை நோக்கி அவரின் கரங்கள் நீண்டிருந்ததையும் இவர்கள் மிக வசதியாக மறந்து விட்டனர்.

தங்களின் பெயர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என அறிந்து கொண்ட பின்னர்தான் சிவாஜிலிங்கமும் சிறிகாந்தாவும், கஜேந்திரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் கைப்பொம்மையாக செயற்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். இவர்களின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புனிதமானவர்கள். தங்களுடைய பெயர்கள் இடம்பெறவில்லை என்றவுடன் தான் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இரண்டாவது குற்றச்சாட்டு சம்பந்தன் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விட்டார் என்பதாகும்.

சம்பந்தன் மட்டுமல்ல யார் யார் இலங்கை நாடாளுமன்ற ஆசனங்களை நோக்கி செல்கிறார்களோ அவர்கள் அனைவரும் தமிழீழ கோரிக்கையை வலியுறுத்தி செயற்பட முடியாது என்பதுதான் யதார்த்தம். பிரிவினைக்கு தாம் துணைபோக மாட்டோம் என சிறிலங்கா அரசியல் யாப்பின் 6ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எழுத்து மூலமும் வாய் மூலமும் சத்தியப்பிரமாணம் செய்த பின்பே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். போட்டியிட்டு வெற்றிபெற்ற பின் சபாநாயகர் முன்னிலையிலும் சத்தியப்பிரமாணம் செய்து கொள்கிறார்கள். கடந்தமுறை தெரிவான 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் 6ஆவது திருத்தச்சட்டமூலத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துவிட்டு வந்த போதுதான் விடுதலைப்புலிகளின் தலைவர் கிளிநொச்சியில் விருந்து வைத்து வாழ்த்தி அனுப்பியதையும் நாம் மறந்து விட முடியாது.

தமிழீழத்தை கோர மாட்டோம் என 6ஆவது திருத்த சட்டத்தின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்த ஜோசப் பரராசசிங்கம், ரவிராஜ் ஆகியோருக்கும் 6ஆவது திருத்த சட்டத்தின் கீழ் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட குமார் பொன்னம்பலத்திற்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மாமனிதர் பட்டம் வழங்கி கௌரவித்ததையும் நாங்கள் மறந்து விடக்கூடாது.

ஆகவே தமிழீழக் கோரிக்கையை கஜேந்திரன் அதிகம் பேசுகிறார், சம்பந்தன் குறைவாக பேசுகிறார் என நாம் தராசில் போட்டு அளந்து பார்க்க முடியாது.

மூன்றாவது குற்றச்சாட்டு செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு இம்முறை வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை என்பது.

முதலில் இந்த கட்டுரையை வாசிப்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் உருவாக்கப்படவில்லை என்பதையும் 2002ஆம் ஆண்டிற்கு பின்னர் விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்பதையும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

2001ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப கூட்டத்திலேயே வேட்பாளர் தெரிவு பற்றி முடிவு எடுக்கப்பட்டிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளிலிருந்தும் விண்ணப்பங்களைப்பெற்று வேட்பாளர்கள் தெரிவு செய்வதென முடிவு செய்யப்பட்டிருந்தது. இது தவிர உறுப்பினர் ஒருவர் கட்சிக்கொள்கைகளுக்கு முரணாக செயற்படும் பட்சத்தில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கட்சி தலைமை பீடத்திற்கு உண்டு என தேர்தல் சட்ட விதி கூறுகின்றது. எனவே எந்த ஒரு வேட்பாளரும் ஒரு கட்சியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற தேர்தல் விதியை கஜேந்திரன் போன்றவர்கள் அறிந்திருக்கவில்லை போல் தெரிகிறது.

2004ஆம் ஆண்டு நான்கு கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு மேலதிகமாக விடுதலைப்புலிகளும் சிலரின் பெயர்களை கொடுத்திருந்தால் அவர்களும் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இம்முறை விடுதலைப்புலிகள் இல்லாத நிலையில் யாழ். மாவட்டத்திற்கு இந்த நான்கு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியிடம் கூட இவர்கள் இருவரும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் வேட்பாளர் பட்டியலில் இடம் ஒதுக்கப்படவில்லை என சர்ச்சைகள் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களில் பலமாக எழுப்பபட்ட பின்னர், யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் நிலையில் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலிருந்து தன்னுடைய பெயரையும் விநாயகமூர்த்தியுடைய பெயரையும் நீக்கிவிட்டு செல்வராசா கஜேந்திரன் , பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரின் பெயர்களை சேர்க்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரினார்.

செல்வராசா கஜேந்திரன் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் கொண்டிருந்தால் அவர்கள் இந்த நான்கு கட்சிகளில் ஏதாவது ஒன்று ஊடாக விண்ணப்பத்தை சமர்ப்பித்திருக்க வேண்டும். அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி ஊடாக ஆரம்பத்திலேயே இந்த இருவரின் பெயர்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

இது தவிர கஜேந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கட்டுப்பட்டது கிடையாது. அவ்வாறு கட்டுப்படாத ஒருவரை அந்த கட்சி எப்படி தன்னுடைய வேட்பாளர் பட்டியலில் சேர்க்கும்.

இன்னுமொரு விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும் . தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படுகிறார்கள் என குற்றம் சாட்டும் கஜேந்திரன் பத்மினி போன்றவர்கள் இந்தியாவை விட மிக மோசமாக தமிழர்களை கொன்று குவித்த சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே?
வெளிநாடுகளில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்ச்சியில் சிறிலங்காவின் இறைமைக்கு எதிராக பேசியதாக அரியநேந்திரன், ஜெயானந்தமூர்த்தி கஜேந்திரன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரியநேந்திரன் 8மணித்தியாலங்களாக சிறிலங்கா குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் 4ஆம் மாடியில் வைத்து விசாரிக்கப்பட்டார். இந்தியாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்ற வேளையில் விமானநிலையத்தில் வைத்து திரும்பி அனுப்பபட்டார். இன்றும் அவர் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

ஆனால் கஜேந்திரன் எந்த வித பிரச்சினையும் இன்றி வெளிநாட்டிலிருந்து கொழும்புக்கு சென்றார். அவரின் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டுவிட்டது. இது எப்படி சாத்தியமானது?

அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு செவ்வி வழங்கிய கிசோர் சிவநாதன் வெளிநாட்டில் இருந்த கஜேந்திரன், சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு இருந்த சிக்கல்களை தானே மகிந்த ராஜபக்சவுடனும் கோதபாயவுடனும் பேசி தீர்த்து வைத்ததாகவும் இவர்களும் மகிந்த, கோதபாய ஆகியோரை சந்தித்ததாகவும் கூறியிருந்தார். கஜேந்திரனும், சிவாஜிலிங்கமும் தாங்கள் இன்னமும் தமிழீழ கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கிறோம் என சொல்வதற்காகவா மகிந்த ராஜபக்சவையும் கோத்தபாயவையும் சந்தித்தனர்?

கிசோரின் கூற்றை இதுவரை கஜேந்திரன் மறுக்கவில்லையே?

அதுபோல நோர்வேயில் இருந்த போது கஜேந்திரன் தன்னுடன் பேசியதாக டக்ளஸ் தேவானந்தா தனக்கு நெருக்கமான யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்திருக்கிறாரே? இது யாரின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடைபெற்றது?

அடுத்த குற்றச்சாட்டு சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தியாவிற்கு செல்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

இந்த குற்றச்சாட்டை வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் முன்வைக்கவில்லை. 10, 15 வருடங்களுக்கு மேலாக மேற்குலக நாடுகளில் தங்கள் குடும்பங்களுடன் வாழ்பவர்கள் தான் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். மாவை சேனாதிராசாவும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமது குடும்பங்களைப்பார்ப்பதற்கு இந்தியாவிற்கு செல்வதில் தவறிருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர்கள் தங்கள் குடும்பங்களை பார்க்க செல்லது தவறென சொல்வதற்கு 10, 15 வருடங்களுக்கு மேலாக வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு நிட்சயமாக இல்லை. அதுபோல தனது சொந்த சகோதரனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வது உட்பட அவசிய தேவைகளுக்காக சம்பந்தன் வெளிநாடு செல்வதில் என்ன தவறிருக்கிறதோ தெரியவில்லை.

இப்பொழுது புதிதாக முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரு குற்றச்சாட்டு சுரேஷ் பிரேமச்சந்திரனின் மனைவி கேரளாவை சேர்ந்தவர் என்பதாகும். சுரேஷ் பிரேமச்சந்திரனின் மனைவி மட்டக்களப்பு லேடி மனிங் வீதியைச் சேர்ந்தவர். சிலவேளை இந்த குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் எல்லோரும் கேரளாவை சேர்ந்தவர்கள் நாராயணனின் உறவினர்கள் என புதிதாக கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை. கிழக்கு மாகாண மக்களை துரோகிகள் என கூறுவதற்கு இவர்கள் எதையும் கண்டுபிடிப்பார்கள்.

அடுத்த குற்றச்சாட்டு தமிழ் டயஸ்போறாவுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பேசுவதில்லை என்பதாகும். மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எத்தனைபேர் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேசினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இது பற்றி அண்மையில் சுவிஷ் நாட்டிற்கு வந்திருந்த மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கென்றி மகேந்திரன் ஆகியோரை நான் சந்தித்து கேட்ட போது ஒரு விடயத்தை சொன்னார்கள். தாங்கள் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர் தரப்புடன் உறவுகளை பேணுவதற்கு சகல முயற்சிகளையும் எடுப்பதாக கூறிய அதேவேளை இங்கே பல பிரிவுகளாக இப்போது பிளவு பட்டு நிற்கிறார்களே ஒருவரோடு தொடர்பை பேணினால் மற்றவர் கோவித்து கொள்கிறாரே என கவலைபட்டுக்கொண்டார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் கிளைகளை அமைத்து இங்குள்ள தமிழர்களுடனும், மேற்குலக இராசதந்திர மட்டங்களிலும் தொடர்புக்களை பேணவேண்டும் என அவர்களிடம் நான் கேட்ட போது கட்டாயம் அதை செய்வதாகவும் ஐரோப்பா, ஒஸ்ரேலியா, அமெரிக்கா, கனடா இந்தியா ஆகிய நாடுகளிலும் தமது கிளைகளை அமைத்து இராசதந்திர நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்கள். இதைத்தான் இப்போது மேற்குலக நாடுகளில் உள்ள சில தமிழர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு புதுடில்லியில் அலுவலகம் அமைக்கப்போகிறார்கள் என தலையில் அடித்துக்கொண்டு திரிகிறார்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்பு புதுடில்லியில் அமைத்தாலென்ன சந்திரமண்டலத்தில் அலுவலகத்தை அமைத்தால் என்ன ஈழத்தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதைத்தான் நாங்கள் பார்க்க வேண்டும்.

இறுதியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைப்பதவியிலிருந்து சம்பந்தன் விலக வேண்டும் என்பதாகும்.

தவிர்க்க முடியாதவாறு இருக்கின்றவர்களில் அரசியலிலும் வயதிலும் அனுபவத்திலும் மிக மூத்தவர் என்ற வகையில் நாடாளுமன்ற குழுத்தலைவராகவும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவராகவும் ஆர்.சம்பந்தன் இருந்து வருகிறார்.

நான்கு கட்சிகளின் தலைவர்கள் என்ற வகையில் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரே பெரும்பாலும் முடிவுகளை எடுக்கின்றனர். ஆனால் சம்பந்தனையே குற்றவாளியாக்கி அவரை பதவி விலக வேண்டும் என கோருவது அவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்ற காரணமாகவும் இருக்கலாம். அதுதவிர மேற்குலக நாடுகளிலிருந்து விடுதலைப்புலிகளின் தலைமையை ஆட்டுவித்தது போல சம்பந்தனும் தங்களுடைய ஆட்டத்திற்கு ஆட மறுக்கிறார் என்பதும் காரணமாக இருக்கலாம்.

இறுதியாக திரு. சம்பந்தன் அவர்களை பதவியில் வைத்திருப்பதும் நீக்குவதும் வடகிழக்கு பிரதேசத்தில் உள்ள தமிழர்களின் கைகளில் இருக்கிறதே ஒழிய மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்களின் கைகளில் இல்லை என்பதை அடுத்த தேர்தல் பதில் அளிக்கும்.

இரா.துரைரத்தினம்
ஊடகவியலாளர்
சுவிற்ஸர்லாந்து
thurair@hotmail.com

0 comments: